’டியூட்டி டைம் முடிஞ்சது நான் கிளம்பட்டுமா’வெனச் சொல்லி விட்டு பகல்
நகர, சாவகாசமாக இருளை எடுத்து இரவு உடுத்தத் துவங்கிய இளமாலை நேரம். புல்தரையில்
அமைக்கப் பட்டிருந்த அழகான சிறிய மேடையைச் சுற்றிலும் வெள்ளைச்சுடிதார் போட்ட
நாற்காலிகள் ,சிவப்பு ரிப்பனை துப்பட்டாவாக அணிந்து காத்துக் கொண்டிருக்கின்றன.
நீதித் துறையைச் சார்ந்த உயரதிகாரிகள் மட்டும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில்
வழக்கமான பணியைத் தவிர்த்திருந்தேன். ரமேஷ்ராஜா பியானோவில் கண்ணியமான பாடல்களை
இசைக்கத் துவங்கியிருந்த போது,அந்தச் சூழல் கொஞ்சம் பெருமிதத்தை தந்த்து
எனக்கு.கோவையில் பியானோவை மெல்லிசை மேடைகளில் பயன்படுத்திய முதல் இசைக் குழு
எங்களுடையது தான் என்பதுவும் ஒரு காரணம்.
ஏற்கனவே மிடுக்காக இருந்த இடம் இன்னும் ஒரு சுற்று முறுக்கிக் கொண்டது. திரு.
சைலேந்திர பாபு அவர்கள் அங்கு வந்த பின்பு. ஜீன்ஸ் பேண்ட்டும் காட்டன் முழுக்கை
சட்டையும் அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும், ‘கற்க கற்க’ பாட்டு ஓடத்துவங்கியது
மனதிற்குள்.( நம்ம புத்தி வேறெங்கு போகும்?) அந்தப் பாட்டில் வருவது போல ‘ராகவன்’ என்று வாய்விட்டே சொல்லி
விட்டேன் ஆர்வத்தில்.’சொல்லுங்கண்ணா’ என்று பக்கத்தில் வந்த
எங்கள் ஓட்டுனரை என்ன என்பது போல் பார்த்தேன்.அவரோ என்னை ’ஐயோ பாவம் யாரு பெத்த
புள்ளையோ’என்பது மாதிரியே பார்த்தார்.சட்டென்று மண்டைக்குள் பல்பு எரிந்ததும்,
புரிந்தது.டிரைவரண்ணா என்று மட்டுமே அழைக்கப் பட்டு வந்த அவர்தம் இயற்பெயர் ராகவன்
என்பதாகும்!
கமலையும் கவுதம்மேனனையும் ஹாரிஸ் ஜெயராஜையும் உஷ்ஷென்று உதடுகளின் மேல் விரல்
வைத்து எச்சரித்து ரகசியக் குரலில் அப்புறமா வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
கையிலிருந்த செல்போனைத் தட்டித் தாளம் போட்டவாறு ரசித்துக் கொண்டிருந்தார்
திரு.சைலேந்திர பாபு. இதுதான் சமயமென்று,’அழகே அழகு தேவதை’, ’ நின்னைச்சரணடைந்தேன்’,’சின்ன சின்ன ஆசை’, ’யாரந்த நிலவு’,’உறவுகள் தொடர்கதை’ போன்ற பாடல்களை அனுப்பி
அவரைச் சுற்றி வளைக்கச் சொன்னேன்.
’புயல் வரும் பாதையில் புல்லாங்குழலை நட்டுவைத்தால்
புரட்ட வரும் புயலுக்கு பொசுக்கென்று கால் முறியும்’
என்பார் கவியன்பன் கேயார் பாபு . நானோ தபேலா,புல்லாங்குழல் தவிர பியானோவையும்
வைத்துக் கொண்டு ஃபுல் ஃபார்மில் இருந்தேன்.
நிகழ்ச்சி முடிந்த பின் பாடகி ரோகிணி சுரேஷுக்காக ஆட்டோகிராஃப் வாங்கிக்
கொடுக்கும் போது பேச்சினூடே ‘நாங்க எல்லாம் உங்க ரசிகர்கள் சார்’ என்றேன்.’என்னை உங்க
ரசிகனாக்கிட்டீங்களே’ என்றார் அந்த கம்பீரக் கலாரசிகர்.திரும்பிப் பின்னால்
பார்த்தேன். பதக்கத்தைக் குத்தி விடும் போது சலனமின்றி விறைப்பாக நிற்கும்
சிப்பாய் மாதிரியிருந்தான் தபேலா பூபதி. பின்பக்கமாக வந்து என்னைக் கட்டிக்
கொண்டார் ரமேஷ் ஜெகன்னாதன். புல்லாங்குழல் பெருமாளோ ‘ஒவ்வொரு பூக்களுமே’வுக்காக படத்தில் சினேகாவின்
பின்னாலிருந்து அழுததை விடவும் அதிகமாக அழுது விடும் தீர்மானத்திலிருந்தான்.(
அன்று அவனுக்குப் பொன்னாடை போர்த்தியவர் கலெக்டர் உமாநாத். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக