.உச்சி வகுந்தெடுத்து....
கோவை அன்னபூர்ணா
அரங்கத்தில் கண்ணதாசன் கழகத்தின் துவக்க விழாவில் கண்ணதாசன் நினைவலைகளாக சில பாடல்களை
வழங்கினோம். நிகழ்ச்சியில் எனக்கும் கீ போர்டு வாசித்த ஆனந்த் அண்ணனுக்கும்
பொன்னாடை போர்த்தினார் நடிகர் திரு.சிவக்குமார் அவர்கள். சம்பவத்தின் போது மீசையை
மழித்து விட்டு அவ்வளவு ‘அளகாக’ இருந்தேன். இனியெப்போது இப்படி
வாய்க்குமென்பது தெரியவில்லை.வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பக்கத்தில் நின்று ஒரு நல்ல
படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.வாய்த்தது!
‘ நடிகர் சிவக்குமாரோட புத்தக அறிமுக விழா விஷயமா
விஜயாபதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி உங்களைப் பாக்கணும்னார், போயிட்டு வந்துருங்க’ என்றார் மரபின் மைந்தன்,எனக்கு
ஒண்ணும் தெரியாது என்பது போல. போகிற போக்கில் நம்மையும் வெளிச்சத்துக்குள்
தள்ளிவிட்டுப் போவது முத்தையாவின் இயல்பு. போனேன்.கல்லாவில் சிதம்பரம் அண்ணன்
இருந்தார்.விஷயத்தை சொன்னவுடன் ’அப்பா உள்ள இருக்காங்க,
போங்க’சினேகிதமாக சொன்னார்.
யாருடனோ
போனில் பேசிக்கொண்டிருந்த வேலயுதம் அய்யா
உரையாடலைத் துண்டிக்காமலே என்னையும் அழைத்து உட்காரவைத்துக் கொண்டார்கள். போன்
பேச்சில் தொய்வே இல்லை, என்னை நலம் விசாரிப்பதும் தேனீர் வரவழைப்பதும், முத்தையா
சொல்லியனுப்பினாரா என்பதையெல்லாம் சைகையிலேயே இரட்டைக் குதிரைகளாக
சமாளித்தவர்,ஆமா.....ஆமா....அப்புறம் இந்த தம்பி வந்துருக்காங்க.......ஜான்
சுந்தர்!..... ஆமா.......பாட்டுக பத்தி எதுவும் பேசணுமாம். பேசிருங்க ’என்றவர் படக்கென்று
ரிசீவரை கையில் கொடுத்துவிட்டு ‘சிவக்குமார்’ என்றால் எப்படி இருக்கும்?
கிணற்றுக்குள்ளிருந்து ‘ சார்’ என்றவனை’என்ன தம்பி நல்லாருக்கியா’ வெளியில் இழுத்துப்
போட்டார் சிவக்குமார்.
’உங்க பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்சது,மறக்க முடியாததுன்னு ஏதாவது பட்டியல்
இருந்ததுன்னா’................
’உனக்குப் பிடிச்சதெல்லாம் எனக்குப்பிடிச்ச மாதிரிதான். நீயும் பேர்
வாங்கணும்னு தானே செய்யப் போறே உன் இஷ்டம் போல செய்யப்பா’ என்று முழு சுதந்திரம்
கொடுத்து விட்டார்.அதில்தான் பொறுப்பும்
அதிகம். பயமும் ஆர்வமுமாக அவரது பாடல்களை நினைவிலிருந்து மீட்டபடியே ராயல்
தியேட்டரைக் கடந்தேன்.
எய்யாடி...........இவருக்கு அமைந்ததெல்லாமே பிரமாதமான பாடல்கள்.
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்,
சீர் கொண்டு வா வெண் மேகமே,
தேவன் தந்த வீணை,
கனாக் காணும் கண்கள் மெல்ல...,
கண்ணா உனைத் தேடுகிறேன் வா......,
ஐயோ..........
ஐயோ....ஒண்ணா ரெண்டா சொக்கா ஒரு மணி நேரம்தான் எனக்கு. எதை எடுப்பேன் எதை விடுவேன்?
இந்த இளைய ராஜாவை என்னதான் செய்யலாம்? சிவக்குமார் அவர்களின் நூறாவது படமான’ரோசாப்பூ ரவிக்கைக் காரி’யின் வெற்றி விழாவில்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’இந்த இளைஞர் ஒரு நாள்
ஆசியக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்வார்’ என்று இளையராஜாவைப் பற்றி
தீர்க்க தரிசனம் சொல்லியிருந்ததைப் படித்த ஞாபகம்.
நிகழ்ச்சியில்’
வா பொன் மயிலே,
என் கண்மணி,
உச்சி வகுந்தெடுத்து,
கேட்டேளே அங்கே,
பருத்தி எடுக்கையிலே,
மாமன் ஒரு நாள் மல்லியப் பூ,
நானொரு சிந்து,
சின்னக் கண்ணன் அழைக்கிறான்,
கண்ணன் ஒரு கைக் குழந்தை
ஆகிய பாடல்களைப் பரிமாறினோம்.
பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசும்போது எங்களையும் குறிப்பிட்டுப் பேசியதை
மேனேஜர் சரவணன் கவனித்து விட்டு,’சாமீ, நம்ம புரோகிராம்
பத்தி உள்ளே பேசிட்டிருக்கிறாங்க இங்கே என்ன செய்யறீங்க’ கேட்டபடியே அதுவரை என்னோடு
வாதடிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்தார்.அவரோ விட்ட இடத்திலிருந்து
தொடர்ந்தார்,.விடாத பழவாசனையோடு.....
’தல.....இவ்ளோ பாட்டு பாட்னியே...... எனெக்காக ஒரே பாட்டு ஸ்டூப்பர் ஸ்ட்டார்
பாட்டு பாச்சா படத்து பாட்டு ..... நா.......ஆட்டாக் காரெ..........ஆட்டாக்
காரெ......’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக